search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிடல்ஸ்"

    டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி அணி. #IPL2019 #DCvKXIP
    ஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் கெயில் 69 ரன்னும், மன்தீப் சிங் 30 ரன்னும் எடுத்தனர். 
     
    டெல்லி அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் சந்தீப் லமிச்சானே 3 விக்கெட்டும், அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரபடா ஆகியோர் 2 விக்கெட்டும் எடுத்தனர். 

    இதைத்தொடர்ந்து, டெல்லி அணி 164  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியொர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது பிரித்வி ஷா 11 ரன்னில் அவுட்டானார்.  அடுத்து தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர்.

    தவான் அரை சதமடித்து 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 6 ரன்னில் வெளியேறினார். ஐங்கிராம் 19 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 19.4. ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். #IPL2019 #DCvKXIP
    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது . #IPL2019 #SRHvDC
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் இந்த முறை 7 ரன்னிலும், பிரித்வி ஷா 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 24 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார்.  அவர் 45 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிஷப் பன்ட் 23 ரன்னில் அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஐதராபாத் அணி வெற்றிபெற 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.




    ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 9.5 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கண்ட நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ (41 ரன்) கீமோ பால் பந்து வீச்சில் ரபடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரை (51 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.


    18.5 ஓவர்களில் ஐதராபாத் அணி 116 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 15 ரன்களுக்குள் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டெல்லி அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ், கீமோ பால் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் ஆட்டநாயகன் விருது பெற்றார். 8-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சுவைத்த 5-வது வெற்றி இதுவாகும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்திடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

    #IPL2019 #SRHvDC
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா - டெல்லி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. #IPL2019 #DCvKKR
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் 4 மாற்றமாக இஷாந்த் ஷர்மா, கீமோ பால், ராகுல் திவேதியா, அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ், ஹர்ஷல் பட்டேல், சந்தீப் லாமிச்சன்னே, ஹனுமா விஹாரி இடம் பிடித்தனர். கொல்கத்தா அணியில் காயத்தால் அவதிப்படும் சுனில் நரினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு நிகில் நாய்க் சேர்க்கப்பட்டார்.

    ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி டெல்லியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. நிகில் நாய்க் (7 ரன்), கிறிஸ் லின் (20 ரன்), உத்தப்பா (11 ரன்), நிதிஷ் ராணா (1 ரன்), சுப்மான் கில் (4 ரன்) ஆகியோர் சீக்கிரம் நடையை கட்டினர். இதனால் கொல்கத்தா அணி 61 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (9.1 ஓவர்) இழந்து தத்தளித்தது.

    இந்த நெருக்கடியான கட்டத்தில் 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக்கும், ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல்லும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரஸ்செல் வழக்கம் போல் பேட்டை ராக்கெட் வேகத்தில் சுழட்டினார். லாமிச்சன்னேவின் சுழற்பந்துவீச்சில் 2 சிக்சர்களை ஓடவிட்டார். ஆனால் 21 ரன்னில் இருந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசிய ‘புல்டாஸ்’ பந்து ஒன்று அவரது இடது தோள்பட்டையை பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் எதிரணியின் பந்து வீச்சை தொடர்ந்து துவம்சம் செய்தார். இன்னொரு பக்கம் கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்புணர்வுடன் ஆடினார்.


    ரஸ்செலின் அதிரடியால் கொல்கத்தா அணி வலுவான ஸ்கோரை நோக்கி பயணித்தது. ரஸ்செல் 62 ரன்களும் (28 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 50 ரன்களும் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். அடுத்து வந்த பியூஸ் சாவ்லா 12 ரன்களும், குல்தீப் யாதவ் 10 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

    பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அமர்க்களப்படுத்தினார். ஷிகர் தவான் (16 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (43 ரன்), ரிஷாப் பான்ட் (11 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினாலும் பிரித்வி ஷா உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரித்வி ஷா 99 ரன்களில் (55 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். ஐ.பி.எல்.-ல் ஒரு வீரர் 99 ரன்னில் அவுட் ஆவது இது 2-வது நிகழ்வாகும்.

    கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசினார். முதல் 5 பந்துகளில் 4 ரன் எடுத்த டெல்லி அணி ஹனுமா விஹாரியின் (2 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது, அதை எதிர்கொண்ட இங்ராம் பந்தை அடித்து விட்டு வேகமாக ஓடினார். 2-வது ரன்னுக்கு திரும்பிய போது இங்ராம் (10 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. 20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்தது.



    இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ‘சூப்பர் ஓவர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி ஒரு விக்கெட்டுக்கு 10 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியால் சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 3 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. சூப்பர் ஓவரில் டெல்லி அணிக்கு ரபடா அபாரமாக பந்து வீசினார்.

    3-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த கொல்கத்தாவுக்கு இது முதலாவது தோல்வியாகும். #IPL2019 #DCvKKR
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #DCvKKR
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டம் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லியில் இன்று இரவு தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 21 போட்டிகள் மோதியுள்ளன. டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வெற்றியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 வெற்றியும் பெற்றுள்ளன.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் நட்சத்திர வீரர்கள்:-

    ஸ்ரேயாஸ் அய்யர் ,ரிஷாப் பான்ட், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரபடா, அக்‌ஷர் பட்டேல்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நட்சத்திர வீரர்கள்:-

    தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின், உத்தப்பா, நிதிஷ் ராணா, சுப்மான் கில். #IPL2019 #DCvKKR
    டெல்லி அணியுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். #IPL2019 #CSKvDC
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

    டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.

    தவான் 47 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி), ரி‌ஷப் பந்த் 13 பந்தில் 25 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர், ஜடேஜா, இம்ரான் தாகீர் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 148 ரன் இலக்கை எடுத்தது. சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வாட்சன் 26 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 32 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), ரெய்னா 16 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா, ரபடா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி இருந்தது டெல்லி அணி முதல் தோல்வியை சந்தித்தது.

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் பந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக திரும்பியது. மேலும் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் பனித்துளி போதுமான அளவுக்கு இருந்தது.

    பந்து வீச்சாளர்கள் பணி பாராட்டுக்குரியது. டெல்லியை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர் நிகிடி இல்லாதது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பே.

    பீல்டிங்கில் நாங்கள் ஒரு போதும் சிறந்து விளங்கவில்லை. ஆனால் மோசமாக இல்லாமல் பாதுகாப்பான பீல்டிங் இருக்கிறது. சில ரன்களை இழந்தாலும் நாங்கள் அனுபவத்தின் மூலம் அதை சரி செய்கிறோம். பீல்டிங்கில் இருக்கும் குறையை நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் நிவர்த்தி செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறும் போது இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இதற்காக பேட்டிங்கை குறை கூற மாட்டேன் என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 31-ந்தேதி சேப்பாக்கத்தில் சந்திக்கிறது. டெல்லி அணி கொல்கத்தாவை 30-ந்தேதி எதிர்கொள்கிறது. #DCvsCSK
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றியை பெற்றது. #IPL2019 #CSKvDC

    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் டிரென்ட் பவுல்டுக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வேகமாக ரன்கள் எடுக்கும் முனைப்புடன் ஆடிய பிரித்வி ஷா, ஷர்துல் தாகூரின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 24 ரன்களில் (16 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார். வேகம் குறைந்த (ஸ்லோ) இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக எழும்பவேவில்லை.

    சென்னை வீரர்கள் பந்து வீச்சில் கொடுத்த குடைச்சலில் டெல்லி அணியின் ஸ்கோர் மந்தமானது. முதல் 9 ஓவர்களில் அந்த அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களில் (20 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து நுழைந்த இளம் புயல் ரிஷாப் பான்ட் ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சில் ஒரு சிக்சரை பறக்க விட்ட ரிஷாப் பான்ட் 25 ரன்களில் (13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராவோவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த காலின் இங்ராமும் (2 ரன்) அதே ஓவரில் காலியானார். மறுமுனையில் தனது 33-வது அரைசதத்தை கடந்த ஷிகர் தவான் 51 ரன்களில் (47 பந்து, 7 பவுண்டரி) பிராவோவின் பந்து வீச்சில் வீழ்ந்தார். இதற்கிடையே கீமோ பால் ரன் ஏதுமின்றி வெளியேற்றப்பட்டார். 7 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்ததால் டெல்லி அணி இறுதி கட்டத்தில் தகிடுதத்தம் போட்டது. 150 ரன்களை எளிதில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி அதற்கு முன்பாகவே அடங்கிப்போனது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஹர்பஜன்சிங் 4 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.



    பின்னர் 148 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. அம்பத்தி ராயுடு 5 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் ஷேன் வாட்சனும், சுரேஷ் ரெய்னாவும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். இஷாந்த் ஷர்மாவின் ஓவரில் ரெய்னா தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை ஓடவிட்டு மிரட்டினார். இஷாந்த் ஷர்மா மற்றும் ரபடாவுடன் களத்தில் வாக்குவாதம், உரசலில் ஈடுபட்டு சூடு கிளப்பிய வாட்சன், அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் அட்டகாசமாக 2 சிக்சர்களை விரட்டியடித்தார். வாட்சன் 44 ரன்களும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ரெய்னா 30 ரன்களும் (16 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி நெருக்கடியை தணித்தனர்.



    இதன் பின்னர் டோனியும், கேதர் ஜாதவும் நிதானமாக ஆடியதால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. ஜாதவ் 27 ரன்களில் (34 பந்து) கேட்ச் ஆனார். சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 32 ரன்களுடனும் (35 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிராவோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    ஆட்டம் முடிந்ததும் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்து டோனியின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

    சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது முதல் தோல்வியாகும்.

    27 பந்தில் 78ரன் (7பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ரிஷப் பந்த் அழிவை ஏற்படுத்தும் பேட்ஸ்மேன் என டெல்லி கேப்டன் ஷிரேயஸ் அய்யர் புகழாரம் சூட்டியுள்ளார். #ShreyasIyer
    மும்பை:

    ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தால் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது.

    ரிஷப் பந்த் 27 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 7 சிக்சர்), காலின் இங்ராம் 32 பந்தில் 47 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 36 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மெக்லகன் 3 விக்கெட்டும், பும்ரா, ஹர்திக் பாண்டியா, பென் கட்டிங் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 176 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    யுவராஜ்சிங் 35 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), குருணால் பாண்டியா 15 பந்தில் 32 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். இஷாந்த் சர்மா, ரபடா தலா 2 விக்கெட்டும், பவுல்ட், அக்‌ஷர் படேல், கீமோ பவுல், ராகுல் திவேதியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ஷிரேயஸ் அய்யர் கூறியதாவது:-



    ரிஷப் பந்த் உண்மையிலேயே அழிவை ஏற்படுத்தும் பேட்ஸ்மேன் ஆவார். கடந்த 1 ஆண்டாக அவரது ஆட்டத்தில் நல்ல முதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. ரி‌ஷப் பந்த் எங்கள் அணிக்கு கிடைத்தது சிறப்பான ஒன்றாகும்.

    கேப்டன் பதவி எனக்கு கிடைத்த கவுரவமாகும். கேப்டன் பதவிக்காக உண்மையிலேயே என்னை தயார்ப்படுத்தி கொண்டுள்ளேன். இந்திய ‘ஏ’ அணிக்கு கேப்டனாக இருந்துள்ளேன். இந்த அனுபவம் எனக்கு கை கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, “முதல் ஆட்டம் பெரும்பாலான அணிகளுக்கு சவாலாகவே இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் பல தவறுகள் செய்தோம். எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. ரி‌ஷ்ப பந்த் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றிவிட்டார்” என்றார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற ரி‌ஷப் பந்த் கூறும்போது, “இது ஒரு பெரிய பயணம். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நாள்தோறும் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன். அணி வெற்றி பெறும் போது சிறப்பாக உணர்கிறேன்” என்றார்.



    டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை நாளை (26-ந்தேதி) சொந்த மண்ணில் சந்திக்கிறது. மும்பை அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை 28-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2019 #MI #DC
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது #IPL2019 #MIvDC

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ஐ.பி.எல். வரலாற்றில் இது 700-வது ஆட்டமாகும்.

    ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் டெல்லியை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பிரித்வி ஷா (7 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (16 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் காலின் இங்ராமும், ஷிகர் தவானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இங்ராம் 47 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்தனர்.

    இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்சர் மழை பொழிந்த அவர் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். உலகத்தரம் வாய்ந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் 2 சிக்சர்களை ஓடவிட்டார். ரிஷாப் பான்டுவின் வாணவேடிக்கையால் டெல்லி அணி 200 ரன்களை எளிதில் கடந்தது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. மும்பைக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 21 வயதான ரிஷாப் பான்ட் 78 ரன்களுடன் (27 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 27 ரன்னிலும், பொல்லார்ட் 21 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர். இந்த சறுக்கலில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. மும்பை அணிக்காக முதல் முறையாக அடியெடுத்து வைத்த யுவராஜ்சிங் அரைசதம் (53 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தது மட்டுமே உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது.

    மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் இஷாந்த் ஷர்மா, ரபடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×